TwitterFacebook

நெகட்டிவ் விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய சூப்பர் ஸ்டார்

Tuesday 16 Dec 2014

கடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா வெளியான மூன்றே நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது. இனிமேலும் இந்த சாதனையை முறியடிக்க இன்னொரு ரஜினியின் படம்தான் வரவேண்டும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

லிங்கா வெளியான தினத்தில் பெரும்பாலான ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துக்கொண்டிருந்த நிலையில் ஒருசிலர் மட்டும் வேண்டுமென்றே நெகட்டிவ் ரிசல்ட்டுக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். பொய்யான சில தகவல்களை கூறி லிங்கா படம் படுதோல்வி அடைந்துவிட்டதுபோல் ஒரு மாயையை ஏற்படுத்தினர். ஆனால் பெரிய பெரிய அரசியல் முதலைகளையே தனது மெளனத்தால் வென்ற சூப்பர் ஸ்டார் அமைதியை நடப்பதை கூர்ந்து கவனித்து வந்தார்

முதல் நாள் பரவிய வதந்தி இரண்டாவது நாள் கொஞ்சம் வலுவடைந்தாலும் மூன்றாவது நாள் அடியோடு நொறுங்கிப்போனது என்பதுதான் உண்மை. மூன்றே நாட்களில் லிங்காவின் வசூல் ரூ.100 கோடியை தாண்டிவிட்டது என்று பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் வெளிவந்ததும் புரளியை கிளப்பிய புல்லுறுவிகள் காணாமல் போயினர். நெகட்டிவ் விமர்சனம் செய்த ஊடகங்கள் அவசர அவசரமாக தாங்கள் முன்பு போட்ட விமர்சனங்களை டெலிட் செய்துவிட்டு அதற்கு பதிலாக புதிய பாசிட்டிவ் விமர்சனங்களை எழுதத்தொடங்கிவிட்டனர். அதுதான் சூப்பர் ஸ்டாரின் பவர்.

தன்னுடைய படத்தை நெகட்டிவ்வாக எழுதியதற்காக கோபப்படாமல் அமைதியாக இருந்து தான் ஒரு நிறைகுடம் என்பதை நிரூபித்துவிட்டார் சூப்பர் ஸ்டார். நேற்று திங்கட்கிழமை வாரத்தின் முதல் வேலைநாளாக இருந்தும் அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆனதில் இருந்தே படம் சூப்பர் ஹிட் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்பதுபோல், லிங்கா எதிர்ப்பாளர்கள் முதலில் வென்றது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்பட்டாலும், இறுதியில் வென்றது சூப்பர் ஸ்டார் மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் அபாரமான நம்பிக்கைதான். கடைசியாக அவருடைய லிங்கா படத்தில் வரும் பாடல்தான் அனைவருக்கும் ஞாபகம் வருகிறது.

‘உண்மை ஒருநாள் வெல்லும்,
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயே,
பொய்கள் புயல் போல் வீசும்
உண்மை மெதுவாய் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்…..

ஜில்லா, கத்தியிடம் தோல்வியடைந்த லிங்கா

December 15, 2014

சமீபகாலமாக அண்டை மாநிலமான கேரளாவில் தமிழ்ப்படங்கள் நல்ல வசூலை பெற்றுக்கொடுத்து கொண்டிருக்கின்றது. முன்பு ஹீரோக்கள் தெலுங்கு உரிமையைத்தான் பெரிதாக கருதுவார்கள். ஆனால் தெலுங்கு மொழிக்கு சரிசமமாக இல்லாவிடினும் கேரளாவில் ஸ்டார்களின் படங்கள் நல்ல வசூலை தயாரிப்பாளர்களுக்கு பெற்று கொடுத்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் சமீபத்தில் வெளியான தமிழ்ப்படங்கள், முதல் நாளில் வசூல் செய்த டாப் 3 படங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலின்படி ஜில்லா முதலிடத்தில் உள்ளது. ஜில்லா 207 திரையரங்களில் வெளியாகி ரூ.2.60 கோடி முதல் நாளில் வசூல் செய்துள்ளது. அடுத்ததாக ‘கத்தி’ திரைப்படம் 168 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகி ரூ.2.25 கோடியும், ரஜினியின் லிங்கா 214 திரையரங்குகளில் வெளியாகி ரூ.1.68 கோடியும் முதல் நாளில் வசூல் செய்துள்ளது.

ரஜினியின் லிங்கா, கத்தி மற்றும் ஜில்லாவை விட அதிக தியேட்டர்களில் வெளியானபோதிலும், அந்த இரு படங்களின் வசூலை எட்டிப்பிடிக்க முடியவில்லை. ‘ஜில்லா’ படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இருந்ததால் அதிக வசூல் பெற்றது என்று எண்ணிக்கொண்டாலும், லிங்காவின் வசூல் கத்தியின் வசூலையாவது எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கத்தியின் வசூலைவிட லிங்கா சுமார் ரூ.60 லட்சம் குறைவாகத்தான் வசூல் செய்துள்ளது. அடுத்து வெளிவர இருக்கும் ‘ஐ’ மற்றும் ‘என்னை அறிந்தால்’ படங்களாவது கேரளாவில் புதிய சாதனை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

லிங்கா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது கிங்கா!

December 12, 2014

சென்னை : வாட்ஸ் அப்பில் லிங்கா பட விமர்சனம் படு சூடாக வலம் வந்து கொண்டுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் லிங்கா. ரஜினியின் பிறந்த தினமான இன்று அப்படம் ரிலீசாகியுள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி நடித்து வெளிவரும் படம் என்பதால் ஏற்கனவே எதிர்பார்ப்பு எகிறிக் கிடந்தது. இந்நிலையில், இக்கதை என்னுடையது தான் என சிலர் லிங்காவுக்கு எதிராக வழக்கு தொடர பரபரப்பு மேலும் அதிகமானது. இவற்றின் காரணமாக அணை பற்றிய கதை தான் லிங்கா என்று ஏற்கனவே ரசிகர்கள் யூகித்து விட்ட நிலையில், தற்போது படமும் ரிலீசாகி விட்டது. எனவே, இன்று காலை முதல் வாட்ஸ் அப்பில் லிங்கா பட விமர்சனம் உலா வர ஆரம்பித்துள்ளது.

லிங்கா... ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது கிங்கா! - இது வாட்ஸ் அப் விமர்சனம்!

அந்த விமர்சனம்: சோலையூர் கிராமத்தில் ஊர் தலைவராக இருந்து வருகிறார் விஸ்வநாத். இவரை அந்த ஊர் மக்கள் அனைவரும் மதித்து, இவருடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு வருகிறார்கள். இந்த ஊரின் எம்.பியான ஜெகபதி பாபு அரசு அதிகாரியான பொன்வண்ணனை கொலை செய்கிறார். இதில் பொன்வண்ணன் உயிர் பிரிவதற்குமுன் விஸ்வநாத்திடம் ஊரில் பல ஆண்டுகளாக மூடியிருக்கும் கோயிலை திறக்க வேண்டும் என்று கூறிவிட்டு இறக்கிறார். அந்த கோயிலை திறக்க வேண்டுமானால் கோயிலை கட்டிய லிங்கேஸ்வரனின் வாரிசுகள் தான் திறக்க வேண்டும். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் விஸ்வநாத்தின் பேத்தியான அனுஷ்கா லிங்கேஸ்வரனின் வாரிசான லிங்கா என்னும் ரஜினியை தேடி செல்கிறார். சென்னையில் ரஜினி தன் நண்பர்களான சந்தானம், கருணா ஆகியோருடன் திருட்டு தொழில் செய்து வருகிறார்.

இவர்கள் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு ஜெயிலிலுக்கு செல்கிறார்கள். இவர்களை அனுஷ்கா தன் முயற்சியால் ஜெயிலில் இருந்து விடுவிக்கிறார். அதன்பின்பு ரஜினியிடம் லிங்கேஸ்வரனின் பேரனான நீங்கள் சோலையூர் கிராமத்து வரவேண்டும் என்றும் கோவிலை திறக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு ரஜினி என் தாத்தா எனக்காக ஏதும் செய்யவில்லை ஆதலால் நான் வரமாட்டேன் என்று கூறி மறுக்கிறார். அதன்பின்பு ரஜினி தன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு 1.5 கோடி மதிப்புள்ள ஒரு நகையை திருடுகிறார். இந்த நகையை சேட்டான மதன்பாப்பிடம் கொடுக்கிறார். இவரை போலீசில் சிக்க வைக்கிறார் அனுஷ்கா. இதையறியும் ரஜினி, மதன்பாப்பால் நாமும் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து அனுஷ்காவுடன் சோலையூர் கிராமத்திற்கு செல்கிறார். அங்கு ஊர் தலைவரான விஸ்வநாத், ரஜினியிடம் இந்த கோயிலில் உள்ள லிங்கம் மரகத கல்லால் செய்யப்பட்டது. இதை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார்.

பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கத்தை திருடி விற்றால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்று எண்ணி கோயிலுக்கு செல்கிறார். அங்கு கோயிலுக்கு யாரோ சென்று விட்டார்கள் என்று நினைத்து மக்கள் கோயிலை சுற்றி வளைக்கிறார்கள். இதிலிருந்து தப்பித்தற்காக ரஜினி கோயிலை திறந்து பூஜை செய்கிறார். அப்போது மக்களிடம் விஸ்வநாத், ரஜினியின் தாத்தா லிங்கேஸ்வரனின் பெருமைகளை எடுத்து கூறுகிறார். இதைக்கேட்ட ரஜினி, தன் தாத்தாவின் உயர்ந்த எண்ணத்தையும் உள்ளத்தையும் எண்ணி வருந்துகிறார். இதனால் இந்த ஊரை விட்டு செல்ல நினைக்கிறார். அப்போது விஸ்வநாத், அரசு அதிகாரியான பொன்வண்ணனை யாரோ கொலை செய்து விட்டதாகவும், இந்த ஊரில் உள்ள பாலத்திற்கும், கோயிலுக்கும் ஆபத்து இருக்கிறது என்றும் கூறுகிறார். நீங்கள் கொலை செய்தவர்களையும், இந்த ஊரையும் காக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதன்பிறகு இந்த ஊரின் எம்.பி.யாக இருக்கும் ஜெகபதிபாபு, ஊரில் உள்ள பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டி அதில் ஊழல் பண்ணலாம் என்று திட்டமிட்டு வருவது ரஜினிக்கு தெரிய வருகிறது. இறுதியில் ஜெகபதிபாபுவின் திட்டத்தை முறியடித்தாரா? பாலத்தை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

அறிமுகப் பாடல் : சூப்பர்ஸ்டாரின் அறிமுக பாடல் அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. வழக்கம்போல் தன் தோளில் மொத்தப் படத்தையும் சுமந்து கொண்டு ரசிகர்களை திருப்தி செய்கிறார். இரண்டு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய ஸ்டைலில் அசத்தியிருக்கிறார். கம்பீரமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். இவர் பேசும் வசனங்கள் எல்லாம் திரையில் தீ பறக்கிறது. அந்த சின்ன சின்ன ரியாக்‌ஷன்ஸ் எல்லாம் அருமையாக செய்திருக்கிறார். மற்ற கதாநாயகிகள் போல் பாடல் காட்சிகளுக்கு வந்து செல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார் அனுஷ்கா. இரண்டாம் பாதியில் அழகாக வந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா. சந்தானத்தின் காமெடி படத்தில் பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ரஜினியுடன் இவர் சேர்ந்து திருடும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். குறுகிய காலத்தில் கதை, திரைக்கதை அமைத்து ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றார் போல் சூப்பரான படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரால் மட்டுமே இயக்கு முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இவரது அனுபவம் திரையில் ஒவ்வொரு காட்சிகளிலும் நன்றாகவே தெரிகிறது. 6 மாத காலத்தில் நிறைய கதாபாத்திரங்களை வைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து பிரம்மாண்டான பாடல் காட்சிகளை உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. பிரம்மாண்டம் : ரத்தினவேலு என்னும் ராண்டி, ராட்டினம் போல் அணையின் பிரம்மாண்ட காட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார்.

ரெயில் சண்டை காட்சிகள் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார். இரண்டு காலத்திற்கு ஏற்றார் போல் ஒளிப்பதிவை திறமையாக கையாண்டிருக்கிறார். பிரம்மாண்டத்திற்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்திருக்கிறது ஏ.ஆர்.ரகுமானின் இசை. இந்தியனே… பாடல் ஒவ்வொரு ரசிகர்கள் மனதிலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ‘லிங்கா’ ரசிகர்கள் மனதில் நிற்கிறார் கிங்கா. இவ்வாறு அந்த விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.

60 வயதில் என்னை டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை- ரஜினி பேச்சு  

Wednesday 10 Dec 2014

ஹைதராபாத்: லிங்கா படத்தின் கதைக்கு நான்கு பேர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதில் உண்மையில்லை. இந்தக் கதை பொன் குமரன் எழுதியது. மிகச் சிறந்த கதை. இதில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது,” என்று ரஜினிகாந்த் கூறினார். ஹைதராபாதில் நடந்த லிங்கா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் சுத்தத் தெலுங்கில் நகைச்சுவை ததும்பப் பேசியது அனைவரையும் மகிழ வைத்தது. அவரது பேச்சிலிருந்து…

60 வயதில் என்னை டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை- ரஜினி பேச்சு

சமீபத்தில் நடந்த புயல் நிவாரண நிதி திரட்டும் கலை நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தனர். ஆனால் அன்றைக்கு எனது குடும்பத்தில் முக்கிய திருமண நிகழ்ச்சி இருந்ததால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் சென்னைக்குத் திரும்பியதும், என்னால் எவ்வளவு உதவித் தொகை தர முடியுமோ அதை அளிப்பேன். நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு வரும் எனது நேரடிப் படம் இது. நடுவில் கோச்சடையான் படம் வந்தது. அது வேறு வகைப் படம். அனிமேஷனில் எடுத்திருந்தார்கள். லிங்கா நேரடிப் படம். முதலில் இத்தனை பிரமாண்ட படத்தை ஆறே மாதங்களில் முடித்திருப்பது. பெரிய நடிகர், பெரிய பட்ஜெட் என்பதை வைத்து இதைச் சொல்லவில்லை. இந்தப் படத்தின் சப்ஜெக்ட் அத்தனை பெரிது.

சுதந்திர காலத்துக்கு முந்தைய 1930கள் மற்றும் 40களில் நடக்கும் கதை இது. இந்தக் கதைக்காக ஒரு பெரிய அணை கட்ட வேண்டியிருந்தது. பெரிய பெரிய ரயில் சண்டைகள், யானைகள், குதிரைகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. குறைந்தது 40 காட்சிகளிலாவது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் இடம்பெற்றனர். இத்தனை பிரமாண்ட ஷூட்டிங்கை ஆறே மாதங்களில் முடித்தது சாதாரணமானதல்ல. ஹேட்ஸ் ஆப் டு டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார், அவரது யூனிட் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். நாங்களெல்லாம் நடிகர்கள் ஒன்றுமே இல்லை.. ஷூட்டிங்குக்கு வருவோம், நடிப்போம், போய்விடுவோம். ஆனால் இந்த டெக்னீஷியன்கள் அசாதாரணமாக உழைத்து 6 மாதங்களில் படத்தை முடித்தார்கள். அந்த உழைப்பு பாராட்டத்தக்கது. இந்தப் படத்தில் மூணு ஆச்சர்யங்கள் இருக்கு.

முதல் ஆச்சர்யம் பெரிய பெரிய டெக்னீஷியன்கள் சாபு சிரில், ரஹ்மான், ரத்னவேலு, சோனாக்ஷி, அனுஷ்கா எல்லாருமே ரொம்ப பெரிய, பிஸியான ஆர்டிஸ்ட்கள். படம் பார்க்கும்போது அவர்களின் உழைப்பு உங்களுக்கு தெரியும்.

இரண்டாவது ஆச்சர்யம், படம் வெளியாகும் நேரம் பாத்து நாலு அஞ்சு பேர் இந்தக் கதை என்னுடையது என சொந்தம் கொண்டாடி வழக்கு தொடர்ந்தனர். ட்விட்டர்ல ஒண்ணு பார்த்தேன். அதில் ரஜினி படத்துல கதை இருக்கா, அப்படி அவர் படத்துல கதை இருந்தா, அந்தக் கதைக்கு நாலு பேர் சொந்தம் கொண்டாடறாங்கன்னா நான் அந்தப் படத்தை முதல்ல பார்ப்பேன்னு ஒருத்தர் போட்டிருந்தார். உண்மையிலேயே இந்தப் படத்தில் நல்ல கதை இருக்கிறது. ஆனா அது அந்த நாலு பேரோடது இல்லை. பொன் குமரனுடையது. எனக்கு ரொம்பப் பிடிச்ச கதை. இதில் நடிச்சது பெருமையா இருக்கு.

மூன்றாவது ஆச்சர்யம்… நான் இந்தப் படத்துல ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சதுன்னா அந்த ரயில் சண்டையோ, க்ளைமாக்ஸ் சண்டையோ அல்ல… இந்த ஹீரோயின்களோட டூயட் பாடி நடிச்சதுதான். சத்தியமா சொல்றேன். இந்த சோனாக்ஷியை சின்னக் குழந்தையா இருக்கும் போதிலிருந்து எனக்குத் தெரியும். என் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா கூடவே வளந்தவங்க. அவங்க கூட டூயட் பாடணும்னு சொன்னதும் எனக்கு வியர்த்துடுச்சி. என்னோட முதல் படமான அபூர்வ ராகங்கள்ல முதல் ஷாட் நடிச்சப்ப கூட இப்படி டென்ஷன் இருந்ததில்லை எனக்கு. நடிகர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும்னு கடவுள் நினைச்சாருன்னா, 60 வயசுல நடிகர்களுக்கு டூயட் பாடற தண்டனையைக் கொடுக்கலாம். மேக்கப் போட்ட பானுவுக்கு நன்றி. கேமராமேன் ரத்தினவேலு கூட சென்னையில நடந்த ஆடியோ விழாவுல வெளிப்படையா சொல்லியிருந்தாரு. நான் ரஜினிகாந்தை ரொம்ம்பக் கஷ்டப்பட்டு இளமையா காட்டியிருக்கேன்… ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு அழகா காட்டியிருக்கேன்னு சொன்னாரு. ரொம்ப கஷ்டப்பட்ட இளமையான காட்டினதா சொன்னது ஓகே.. அழகா காட்டியிருக்கேன்னு சொன்னது…(பலமாக சிரிக்கிறார்)..

இந்தப் படம் 6 மாதத்தில் முடிந்ததை நான் சாதனையாகச் சொல்வேன். என்னைப் போன்ற ஒரு சீனியர் நடிகர், இந்த துறையில் இவ்வளவு சம்பாதித்த பிறகு, அந்தத் துறைக்கு ஏதாவது ஒரு நல்லது செய்ய வேண்டும், இங்குள்ள இளம் கலைஞர்களுக்கு ஒரு உதாரணத்தைத் தரவேண்டும். அதுதான் இந்த லிங்கா. இதை ஒரு சபதமாக எடுத்துக் கொண்டு செயல்பட்டோம். அதை ரவிக்குமார் சாதித்துக் காட்டினார். ஹாலிவுட்டில் கூட படங்கள் தொடங்குவதற்கு முன்பு பல மாதங்கள், ஏன் வருடங்களைக் கூட எடுத்துக் கொண்டு முன் தயாரிப்புப் பணிகளைச் செய்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பை 3 அல்லது நான்கு மாதங்களில் முடித்துவிடுகிறார்கள். ராஜமவுலியின் பாஹுபலி இதில் விதிவிலக்கு. இதில் அவரைச் சேர்க்க வேண்டாம். அவர் ஒரு அற்புதமான கலைஞர். இந்தியாவின் நம்பர் ஒன் கலைஞராக வரக்கூடியவர். சந்தேகமில்லை. சொல்லப்போனால், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருடன் பணியாற்றுவதை சந்தோஷமாகக் கருதுவேன். ரவிகுமார், இந்தப் படத்தின் கேப்டன். சிறப்பாகப் பணியாற்றினார்.

அடுத்து அல்லு அரவிந்த் சொன்னதுபோல, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். ஆபத்பாந்தவன். பலனை எதிர்ப்பார்க்காமல் கூப்பிட்ட நேரத்தில் ஓடி வந்து உதவுபவர். அதனால்தான் அவர் இங்கே அமர்ந்திருக்கிறார். ரத்னவேலு இந்தப் படத்துக்காக மிக கஷ்டப்பட்டார். கொட்டும் மழையில் படம்பிடித்தார். அனுஷ்கா மிக அருமையான பெண். சிறந்த நடிகை. அவருக்கு நன்றி. அடுத்து ஜெகபதி பாபு. பிறக்கும்போதே வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர். சினிமாவில் ஜென்டில்மேன் எனலாம். குசேலனில் என்னுடன் நடித்தவர். இந்தப் படத்தில் அவரை நன்றாகப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து அவருடன் பணியாற்ற விரும்புகிறேன். என் படங்களை தமிழ் ரசிகர்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்களோ, அதே உற்சாகத்துடன் தெலுங்கு ரசிகர்களும் ரசித்து என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்தப் படமும் உங்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கும். உங்கள் ஆதரவும் உற்சாகமும் எனக்குக் கிடைக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

 

டங்காமாரி பாடல் உருவான விதம். பாடலாசிரியர் ரோகேஷ்

December 09, 2014

கடந்த சில நாட்காளாக இளைஞர்களின் மத்தியில் பயங்கரமாக பிரபலமாகியுள்ள பாடல் அனேகன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்காமாரி ஊதாரி’ பாடல்தான். தனுஷ், மரண கானா விஜி, நவீன் மாதவ் பாடியுள்ள இந்த பாடலை ரோகேஷ் என்பவர் எழுதியுள்ளார். ரோகேஷுக்கு இந்த பாடல்தான் முதல்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் உருவானது குறித்து ரோகேஷ் கூறியபோது, ‘முதன்முதலாக இந்த பாடலின் வரிகளை எழுதி நான் அனேகன் படக்குழுவினர்களிடம் காட்டியபோது தனுஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் பாராட்டியபோதுதான் எனக்கு உயிரே வந்தது. இந்த பாடலில் இடம்பெறும் டங்காமாரி என்ற சொல்,  வடசென்னையில் வயதானவர்கள் மட்டுமே உபயோகிக்கும் சொல். என்னுடைய பாட்டி அடிக்கடி என்னை ‘டங்காமாரி ஊதாரியா சுத்திக்கிட்டே இருக்கியேடா’ என்று திட்டுவார். என் பாட்டியின் திட்டுதான் எனக்கு தற்போது வாழ்வு கொடுத்துள்ளது.

இந்த பாடலை பாடுவதற்கு பலரை அழைத்து வந்து கே.வி.ஆனந்த் முயற்சி செய்தார். ஆனால் பாடல் இயல்பாக அமையவில்லை. கடைசியில் மரண கானா விஜி குரலில் மிக அற்புதமாக ஹாரீஸ் ஜெயராஜ் இந்த பாடலை அமைத்துள்ளார். என்னை கே.வி.ஆனந்த் சார் அவர்களிடம் அறிமுகப்படுத்திய கலை இயக்குனர் கிரணுக்கு என்னுடைய நன்றி’ என்று கூறியுள்ளார்.

இந்த ஒரே பாடலின் சூப்பர் ஹிட் ரோகேஷுக்கு பல பாடல்களை எழுத வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா-சூர்யா

Monday 08 Dec 2014

பில்லா, ஆரம்பம் படங்களை அடுத்து பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ‘யட்சன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜீத்தின் ரசிகராக இந்த படத்தில் ஆர்யா நடித்துள்ளார். அஜீத்தின் கட் அவுட்டுக்கு ஆர்யா பாலாபிஷேகம் செய்வது போன்ற ஸ்டில்கள் சமீபத்தில் வெளியாகி  பெரும் வரவேற்பை பெற்றன.

ஆர்யா, தீபா சந்நிதி, கிருஷ்ணா, ஸ்வாதி ரெட்டி,தம்பி ராமையா, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எஸ்.ஜே.சூர்யா நடித்து இயக்கியுள்ள இசை படத்தின் ரிலீஸ் குறித்து பரபரப்புடன் இருக்கும் சூர்யா, இந்த படத்திற்காக நேரம் ஒதுக்கி நடித்து கொடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் எஸ்.ஜே.சூர்யாவின் இசை படத்தில் விஷ்ணுவர்தன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

யூடிவி நிறுவனம் தயாரித்து வரும் யட்சன் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில் இந்த படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர் சி மீது ரூ.50 லட்சம் மோசடி புகார் கொடுத்த ரஜினி தயாரிப்பாளர்

அரண்மனை வெற்றிப்படத்தை அடுத்து விஷால், ஹன்சிகா நடிக்கும் ‘ஆம்பள’ என்னும் படத்தை இயக்கி வரும் சுந்தர் சி மீது ரூ.50 லட்சம் மோசடி புகார் ஒன்று சென்னை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், லதா, விஜயகுமார் நடித்து கடந்த 1978ஆம் ஆண்டு ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் முத்துராமன் என்பவர்தான் இந்த புகாரை பதிவு செய்துள்ளார். அவர் தனது புகாரில் தனது ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தை ‘அரண்மனை’ என்ற பெயரில் ரீமேக் செய்வதற்காக தன்னிடம் அனுமதி வாங்கிய சுந்தர் சி தனக்கு ரூ.50 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் ஆனால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் ஏமாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆயிரம் ஜென்மங்கள் படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் தானே ரீமேக் செய்ய இருந்ததாகவும், சுந்தர் சி ரூ.50 லட்சம் தருவதாக சொன்ன வாக்குறுதியால் அந்த படத்தின் ரீமேக் ஐடியாவை தான் ரத்து செய்துவிட்டதாகவும் இதனால் தனக்கு அதிக பண நஷ்டம் ஆனதாகவும் அவர் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் விவகாரம் கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

லிங்காவுக்கு எதிரான மனு தள்ளுபடி. டிசம்பர் 12ல் ரிலீஸ் உறுதி

Thursday 04 Dec 2014

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் லிங்காவுக்கு ஏற்பட்டிருந்த தடை அகன்றதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மதுரையை சேர்ந்த ராமரத்தினம் என்பவர், தான் தயாரித்த ‘முல்லைவனம் 999′ என்ற படத்தின் கதையை திருடி லிங்கா படம் எடுக்கப்பட்டதாகவும், எனவே லிங்காவை தடை செய்யவேண்டும் என்று கோரி மனு ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு ரஜினிகாந்த் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டில் இன்று இந்த வழக்கு நீதிபதி வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பின் வழக்கறிஞர்கள் வாதாடிய பின்னர் ‘லிங்கா படம் வெளிவருவதற்கு முன்பே அந்த படத்தின் கதை தன்னுடையது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். தேவைப்பட்டால், மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை அணுகி, பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்று அவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பு காரணமாக லிங்கா படத்திற்கு இருந்த ஒரே தடையும் அகன்றுவிட்டது. இதனால் லிங்கா டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸாவது உறுதியாகிவிட்டது.

பாலிவுட் பாடகராகும் டார்லிங் நடிகர்

Wednesday 03 Dec 2014

பென்சில், டார்லிங், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துக்கொண்டே பல படங்களுக்கு இசையமைத்துக்கொண்டும் பிசியாக உள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது பாலிவுட் படவுலகில் கால் வைத்துள்ளார். நடிகராகவோ இசையமைப்பாளராகவோ இல்லாமல் அங்கு பாடகராக அறிமுகமாகிறார்.

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கி வரும் ‘அக்லி’ என்ற படத்தில் ஒரு பாடலை பாட ஜி.வி.பிரகாஷ் பாடவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே அனுராக் காஷ்யப் இயக்கிய Gangs of Wasseypur என்ற படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்து வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது பென்சில், டார்லிங், சூதாடி, ஈட்டி, சிகப்பு ரோஜாக்கள் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இணைகிறது பாண்டிய நாடு ஜோடி

Tuesday 02 Dec 2014

சுந்தர் சி இயக்கத்தில் தற்போது பிசியாக நடித்து வரும் விஷால், அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சுசீந்திரன் ஏற்கனவே விஷாலின் “பாண்டியநாடு” என்ற ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால்-சுசீந்திரன் மீண்டும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கவுள்ளதாகவும், பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது. நாயகி உள்பட இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

சுசீந்திரன் படத்தை முடித்த பின்னர் விஷால், லிங்குசாமியின் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விஷால் நடிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் “ஆம்பள” படத்தின் ‘பழகிக்கலாம்’ என்ற பாடல் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பாடலுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.